இக்கட்டுரை இலண்டன் பழையமாணவா் சங்கத்தின் வெளியீடு ஒன்றுக்காக 2006 இல் நான் அனுப்பி வைத்தது. மின்னஞ்சலில் சேமிக்கப்பட்டிருந்தது என்கண்ணில் இன்று பட்டது இங்கே பதிவு செய்கிறேன்.
1990 ம் ஆண்டு சனவரி 9 ம் திகதி யாழ் இந்துக்கல்லுரியில் நான் புதியமாணவனாக அப்பாவுடன் உள்நுழைந்த போது எழுந்த உணர்வுகளை எந்தப்பேனாகொண்டோ எந்தக்கணினி கொண்டோ எழுத்துருவாக்கம் செய்யமுடியாது. இது திரு பொன்னம்பலம் அதிபராக இருந்த காலப்பகுதி திரு மகேந்திரன் உப அதிபராக இருந்தார். கல்லுரியின் விடுதியில் சேர்த்து விடடார்கள் நானோ சின்னப்பயைன் உருவத்திலும் கூட. கல்லுாரி விடுதியின் நுழைவாயில் எனக்கு உண்மையிலேயே பென்னம்பெரியதாக தோன்றியது. ஏன் அரசகாலச்சிறை போலவும் தோன்றியது. எனது கண்ணில் கண்ணீர் குழமாகி தெரிந்த பயத்தை உபஅதிபர் தேற்றி நான் பார்த்துக்கொள்கிறேன் என அப்பாவிடம் கூறியது நெஞ்சைவிட்டகலவில்லை. எனது விடுதிவாழ்க்கை கற்றுத்தந்தவைகள் நிறைய இருக்கின்றன. அங்கு எனக்கு வழங்கப்பட்ட “சிறுசு” என்ற பட்டப்பெயரை மறக்கவில்லை. நான் எந்த ஒருசின்னப்பிரச்சனைக்கும் அழுதுவிடுவேன் இது எனது ஆரம்ப கல்லூரிவாழ்கை ஆனால் இன்று துன்பம் வரும்போதும் சிரிக்கின்றேன் இது கல்லூரி எனக்கு கற்று;த்தந்தது. என்னுடன் பழகியவர்கள் பலர். இருப்பவர்கள் சிலர். என் கல்லுாரி வாழ்க்கையில் பழகிய மூத்த ,சக மாணவர்கள் சிலர் உயிருடன் கூட இல்லை தம்மையே அவர்கள் தியாகம் செய்துவிட்டார்கள். கற்பித்த ஆசிரியர்களில்,மாணவர்களில் சிலர் எனது அழுகைக்கு காரணமாயிருந்தார்கள் அவர்களின் மீது எனக்கு அன்று வெறுப்பாயிருந்தது. அப்போது நினைத்தேன் வளர்ந்து பெரியவனாகியதும் அவர்களை ஒருவழிபார்க்க வேண்டும் என்று. ஆனால் இன்று பெரியவனாகிவிட்டேன். இவர்களைக் காண்கிறேன். வெறுப்புவரவில்லை.இனம்புரியாத அன்பு ,பணிவு பெருகுகிறது இதற்கு காரணம் எனது கல்லூரி வாழ்க்கை தான்.
விளையாட்டுத்திடலுக்கு சென்றால் என்ன ஆய்வுகூடத்துக்கு சென்றால் என்ன நூலகத்துக்கு சென்றால் என்ன கல்லூரி மண்ணில் எமது வகுப்பு மாணவர்கள் ஒழுங்கு வரிசையில் செல்லும் ஒவ்வொரு கணத்திலும் நான் முதல் மாணவனாக சென்ற கணத்தை நினைத்துப்பார்க்கின்றேன் ஆம் இந்த சம்பவத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது .எனது பழைய நண்பர்களுடன் கதைக்கும்போது நினைவு கூருவேன். வயிறு குலுங்க சிரிப்பார்கள். ஆண்டு 11 படித்துக்கொண்டிருந்த காலம் எமக்கு சமூகக்கல்வியும் வரலாறும் கற்பித்தவர் திரு ஜெயபாலன் அவர்கள்.(இப்பொழுதும் கற்பிக்கிறார்)அவர் உருவத்தில் சிறியவர் அதனால் முதல்வரிசை மேசையில் நடுவில் இருந்த சேயோன் என்ற மாணவனின் மேசையில் ஏறி உட்கார்ந்து பாடம்சொல்லுவார். ஒருநாள் மேசையில் ஏறிஇருந்து கற்பித்துக்கொண்டிருக்கையில் மேசையில் பேனா மையினை சேயோன் சாதுர்ஜயமாக கொட்டிவிட அது ஆசிரியரின் காற்சட்டையினை பாழாக்கிவிட்டது. அதனை ஒழுக்கவிதி மீறாத நண்பன் ஜெயமதன் காட்டிக்கொடுத்தது விட சேயோன் வாங்கிஅடியை சேயோன் மறந்தானோ என்னவோ என்னால் மறக்கமுடியாது.
இது தவிர தவமணிதாசன் ஆசிரியரின் அடிகளுடன்கூடிய கற்பித்தல்கள், மனோரஞ்சன் ஆசானின் கராட்டி குத்துக்களுடன்கூடிய ஆங்கிலம், என்னை கணிதபாடத்தை விரும்ப வைத்த சிறீதரன் மற்றும் சபாநாயகம் ஆசான்களின் கண்டிப்புடன் கூடிய கணிதபாட வகுப்புக்கள், ச.வே.பஞ்சாட்சரம் ,சிவராஜா ஆசான்களின் தேசியப்பற்றுடனான தமிழ் வகுப்புக்கள், கஜன் ஆசிரியரின் அறிவியலுடன் கூடிய விஞ்ஞானம், புண்ணியலிங்கம் ,தர்மகுலசிங்கம் ஆசிரியர்களின் இந்துமதத்தை உணரவைத்த பிரார்த்தனை வழிபாடுகள்,சண் தயாளன் ஆசிரியரின் சகோதரத்துவமான விளையாட்டுப்பயிற்சிகள், செல்வி செல்லத்துரை மற்றும் பத்மநாதன் ஆகியோரின் இனிமையான சங்கீத வகுப்புக்கள், வகுப்பறையில் நுழையும்போதே ”31.12 ஆயிரத்து தொளாயிரத்து…” என வியாபார இலாபநட்டகணக்கினை ஆரம்பித்து விடும் சிவஞானசுந்தரம்பிள்ளை அவர்களின் வர்த்தகமும் கணக்கியலும் வகுப்புக்கள் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அதிபர் பஞ்சலிங்கம் அவர்களின் மாணவர்களின் ஆக்கத்திறன் விருத்தியின் மீது கவனம் செலுத்திய நிருவாகம் நினைவகலாதது, அதிபர் சிறீகுமரன் அவர்களின் கண்டிப்பான அணுகுமுறைகளும் எம்மை வியக்கவைத்தவைகளே. இதேபோல உயர்தரவகுப்பில் எனது லியோக்கழக சாதனைகளுக்கு முன்னோடியாக இருந்தவரும் வகுப்பாசிரியராக இருந்து பிரயோக கணிதம் கற்பித்த கொஸ்அல்பா என்றே மாணவரால் அறியப்பட்ட ஞானசேகரம் ஆசிரியரின் பயனள்ள அறிவுரைகள் பயனுள்ளவை. இரசாயனவியலில் சுருக்கமானதும் காட்டமானதுமான கற்பித்தலை செய்த குட்டி மக்கர் என்று செல்லமாக அழைக்கும் மகேஸ்வரன் அவர்களின் கற்பித்தல் .என்னை லியோக்க கழகம் சார்பாக அழைக்க கழகத்தில் இருந்து யாரேனும் வந்தால் அவர்கள் கேட்காமலேயே என்னை நக்கலுடன் அனுப்பிவைப்பதன் மூலம் என்னை சிந்திக்கவைத்தவரும் இவரே. அத்துடன் உயர்தர மாணவர்களின் ஒழுக்க நலன்களில் பெரிதும் பங்காற்றிய பிரதி அதிபா மகேஸ்வரனும் மறக்க முடியாத ஒருவர்.
இவ்வாறு என் வாழ்கையில் மாத்திரமல்ல பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய கல்லுரிச்சமூகத்தில் இன்று பல புதியவர்கள் வந்து இணைந்திருக்கிறார்கள்.அவர்களில் பலர் எமக்கு புதியவர்களாயிருக்கலாம் ஆனால் கல்லுரிக்கு அவர்கள் பழையவர்களே. இன்று நான் பழையமாணவனாக கல்லூரிக்கு செல்லும்போது உலகளாவிய பழைய மாணவர்களின் ஆதரவுகளின் வெளிப்பாடுகளும் புதிய துடிப்பான அதிபரின் நிர்வாக திறமையும் எமது கல்லூரிக்கு புதிய மெருகூட்டிக்கொண்டிருப்பதை உணர்கின்றேன். பழையமாணவர்சங்க பிரதிநிதியாக இருப்பதன் மூலம் எனது கல்லுாரி சமூகத்துக்கு நிறையவே பங்களிக்கக்கூடியதாக இருப்பதையும் உணர்கிறேன்